search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் கொள்ளை"

    • காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.
    • வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கீரைக்கார தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கள்ளக்குறிச்சியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் கள்ளக்குறிச்சியில் வசித்து வருகிறார். திண்டிவனத்தில் உள்ள வீடு பூட்டி கிடந்தது. இன்று காலை வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை அக்கம் பக்கத்தினர் பார்த்தனர்.

    இது குறித்து அவர்கள் சரவணனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் திண்டிவனம் விரைந்து வந்தார். வீட்டிற்குள் நுழைந்த போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.

    அதில் வைக்கப்பட்டு இருந்த 3 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் இது குறித்து திண்டிவனம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், சுதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் சரவணன் வீட்டின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இன்ஸ்பெக்டர் கலைசெல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக பிரிந்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். திண்டிவனம் பகுதியில் அடிக்கடி கொள்ளை மற்றும் திருட்டு நடைபெற்று வருகின்றது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
    • போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள பிளசண்ட் நகரை சேர்ந்தவர் டாக்டர் கலைக்குமார் (வயது 52). இவர் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் புனிதவதி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

    மனைவி மற்றும் மகள் வாரத்திற்கு ஒரு முறை தான் வீட்டுக்கு வருவார்களாம். கலைக்குமார் தான் வீட்டில் இருந்து வந்துள்ளார். அவரும் தினமும் காலை 7.30 மணிக்கு பணிக்காக நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு கிளம்பி சென்று விடுவாராம். அதன்பிறகு மாலை அல்லது இரவு நேரத்தில் தான் அவர் வீடு திரும்புவார்.

    நேற்று காலையும் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கலைக்குமார், இரவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அங்கு பீரோ பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    அதில் இருந்த பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. இதனால் கொள்ளை சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்த அவர், நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்த்தனர். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து யாரோ மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பீரோவில் இருந்த 87 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் கொள்ளை போயிருப்பதாக போலீசாரிடம் கலைக்குமார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கொள்ளை நடந்த பிளசண்ட் நகர் பகுதி வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியாகும். இங்கு வீடுகளும் நெருக்கமாகவே உள்ளன. அப்படியிருந்தும் ஆள் இல்லாத வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் லாவகமாக வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே ஆள் இல்லாத வீட்டில் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    ஆனாலும் கொள்ளை யர்கள், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தொடர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதனை தடுக்க கொள்ளையர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை சுற்று வட்டார கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆலம்பட்டியை சேர்ந்த சிலர் ஏ.டி.எம். மையம் உள்ள பகுதிக்கு சென்றபோது ஏ.டி.எம். எந்திரம் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே திருமங்கலம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏ.டி.எம். மையத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தின் முன்பக்கத்தை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

    இதில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது பணம் உள்ள பெட்டியை திறக்க முடியாமல் கொள்ளை திட்டத்தை பாதியிலேயே கைவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா? என தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து ஏ.டி.எம். மைய நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்ப பணியாளர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை திறந்த பின்பு தான் பணம் கொள்ளை போனது குறித்து தெரியவரும். இதற்கிடையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் போலீசார் கைப்பற்றினர். அதை ஆய்வு செய்த பின்பு தான் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து தெரியவரும்.

    இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள தனது விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.
    • ரத்தினம்மாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூர் மேடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 56). இவரது கணவர் சுப்பிரமணியன் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். ரத்தினம்மாள் தனது மகன் பிரவீன் வீட்டில் மருமகள், பேரனுடன் வசித்து வருகிறார்.

    பிரவீன் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். விவசாய வேலை காரணமாக ரத்தினம்மாள் கடந்த 1-ந்தேதியன்று ஏளூரில் உள்ள வீட்டை பூட்டி விட்டு, அருகிலுள்ள தனது விவசாய தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை ஏளூரில் உள்ள ரத்தினம்மாள் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக, வீட்டின் அருகில் இருந்தோர் போனில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த ரத்தினம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்த போது 2 பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோக்களில் இருந்த ரொக்க பணம் ரூ.1 லட்சம், 3 பவுன் தங்க பட்டை செயின் 2, 1 பவுன் தங்க காசு, 1 பவுன் கம்மல் ஒரு ஜோடி மற்றும் அரை பவுன் தங்க கம்மல் ஒரு ஜோடி என தங்க நகைகள் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து ரத்தினம்மாள் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் தேடி வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுர் அடுத்த கைவண்டூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். அரசு பள்ளி ஆசிரியர். நேற்று காலை வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மாலையில் மூத்த மகன் வினோலியன் என்பவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிய அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 2 லேப்-டாப் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.

    சென்னை, வடபழனி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா. இவர்களது மகன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    ஆஷா நேற்று விஷேச நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டார். அப்போது பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஆஷா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.
    • சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த வாலூரை சேர்ந்தவர் தசரதன் (வயது 35). இவர் வெலக்கல் நத்தம் பகுதியில் செல்போன் சர்வீஸ் மற்றும் விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை சேர்ந்தவர் ஜெயபால் (47). டெய்லர். இவரும், வாலிபர் ஒருவரும் தசரதன் செல்போன் கடைக்கு பைக்கில் வந்தனர்.

    அப்போது தசரதனிடம் வாலிபர் தனக்கு அவசரமாக ரூ.20 ஆயிரத்தை கூகுள் பே அல்லது ஜி பேயில் அனுப்புமாறும் கையில் பணத்தை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய தசரதன் ஆன்லைன் மூலம் ரூ.20 ஆயிரத்தை வாலிபர் சொன்ன எண்ணுக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் பணத்தை தசரதன் கேட்டார். அதற்கு அந்த வாலிபர் அருகே உள்ள ஏ.டி.எம்-மிற்கு சென்று பணத்தை எடுத்து வந்து தருவதாக கூறினார். இதனால் ஜெயபாலை செல்போன் கடையில் அமர வைத்துவிட்டு வாலிபர் பணத்தை எடுத்து வருவதாக கூறி விட்டு சென்றார்.

    வெகு நேரமாகியும் வாலிபர் வராததால் ஜெயபால், நான் சென்று பார்த்து வருகிறேன் என்று தசரதனிடம் கூறிவிட்டு சிறிது தூரம் சென்றார். சந்தேகம் அடைந்த தசரதன் கத்தி கூச்சலிட்டார். அப்போது அங்கிருந்து ஓட்டம் பிடித்த ஜெயபாலை அருகே இருந்த வியாபாரிகள் விரட்டி பிடித்தனர்.

    பின்னர் ஜெயபாலிடம் விசாரித்தபோது, தன்னுடன் வந்த வாலிபர் யார் என்பது எனக்கும் தெரியாது. நான் மது குடிக்க வந்தேன். அங்குதான் அந்த வாலிபரை சந்தித்தேன்.

    மேலும் அந்த வாலிபர் எனக்கு ஒரு குவாட்டர் வாங்கி தருகிறேன் என்று கூறி என்னுடன் வாருங்கள் என்று இங்கே அழைத்து வந்தார். நானும் மது பழக்கத்தால் குவாட்டருக்கு ஆசைப்பட்டு வந்தேன். என்னை அடகு வைத்து மாட்டி விட்டு சென்றுவிட்டார் என்று புலம்பினார்.

    தசரதன் உடனடியாக வங்கிக்கு சென்று வாலிபர் கொடுத்த செல்போன் நம்பரை வைத்து வங்கி கணக்கை பரிசோதித்து பார்த்தார். அப்போது வங்கி கணக்கில் இருந்து பணம் மும்பை ஏ.டி.எம். கார்டை வைத்து எடுத்தது தெரிய வந்தது.

    ஜெயபாலை நாட்டறம் பள்ளி போலீசில் ஒப்படைத்தனர். டெய்லரை அடகு வைத்த கில்லாடி திருடனை தேடி வருகின்றனர்.

    சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
    • உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

    இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-

    இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.

    • கோவில் கட்ட சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் மீனாட்சி புரம் வீதியில் சொந்தமான 100 ஆண்டு பழைமை வாய்ந்த வீடு ஒன்று உள்ளது.

    அவ்வப்போது அரிமளத்தில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் செல்வதை வைரவன் வழக்கமாக வைத்துள்ளார்.

    அரிமளம் அருகே இசுகுப்பட்டி கிராமத்தில் வைரவன் குடும்பத்தாருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் கோவில் கட்டுவதென்று வைரவன் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    அதற்காக பணம் சேகரிக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட பணம் ரூ.11 லட்சத்தை அரிமளம் வீட்டில் உள்ள பெட்டியில் வைரவன் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வைரவன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. வீட்டில் அறையில் பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.11 லட்சம் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக அரிமளம் போலீசில் வைரவன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரித்தனர்.

    தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.

    • உணவு இடைவேளைக்காக பஸ், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகத்தில் நிறுத்தப்பட்டது.
    • கோட்டூர்புரம் போலீசில் அன்பழகன் புகார் செய்துள்ளார்.

    சென்னை தரமணியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 60). இவர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக புதுச்சேரி சென்றார். பின்னர் அரசு பஸ் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். பஸ்சில் அன்பழகன் அருகில் அமர்ந்திருந்த வாலிபர் அவருடன் பேச்சு கொடுத்து வந்தார்.

    உணவு இடைவேளைக்காக பஸ், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள உணவகத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது அன்பழகனுக்கு அந்த வாலிபர் டீ, பிஸ்கட் வாங்கி கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அன்பழகன் மயங்கினார். இதையடுத்து அந்த வாலிபர் அன்பழகன் அணிந்திருந்த 10 பவுன் நகை, மோதிரம், கைக்கடிகாரம் மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை 'அபேஸ்' செய்து விட்டு பஸ்சில் இருந்து இறங்கி தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் போலீசில் அன்பழகன் புகார் செய்துள்ளார்.

    • காரில் முன்பக்க கண்ணாடியை‌ உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.
    • மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

    இவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பைனான்ஸ் நடத்தி வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு சரவணன் ரூ.15 லட்சம் பணத்துடன் காரில் சித்தூரில் இருந்து ராணிப்பேட்டை அம்மூர் நோக்கி வந்தார். காரை ராணிப்பேட்டை அடுத்த பெரிய தாங்கல் கிராமத்தை சேர்ந்த டிரைவர் சுந்தர் (36) என்பவர் ஓட்டி வந்தார்.

    அம்மூர் செல்லும் சாலையில் கத்தாரிகுப்பம் கிராமம் வனத்துறை செக் போஸ்ட் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மர்ம நபர்கள் 4 பேர் அவர்களை பின் தொடர்ந்து காரில் வந்தனர்.

    முந்தி சென்று சரவணனின் காரை மடக்கினர்.

    காரில் முன்பக்க கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி சரவணனிடம் ரூ.15 லட்சம் பறித்தனர்.

    இதை தடுக்க முயன்ற சரவணன்,டிரைவர் சுந்தர் ஆகியோரை மர்ம நபர்கள் தாக்கியனர். இதில் சரவணனுக்கு வலது கையிலும், சுந்தருக்கு கழுத்திலும் காயம் ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து இவர்கள் கூச்சலிட்டனர். மர்ம நபர்கள் 4 பேரும் அங்கிருந்து தாங்கள் வந்த பதிவு எண் அகற்றப்பட்ட காரில் தப்பி சென்றனர்.

    கும்பல் சென்ற கார் கத்தாரிகுப்பம் கிராமத்தின் அருகே வயல்வெளியில் சேற்றில் சிக்கியது. அந்த காரை அப்படியே விட்டு விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    காரிலிருந்து தப்பி ஓடிய கும்பல் வனப்பகுதி வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இந்த வழிப்பறி சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வழிப்பறி தொடர்பாக ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்தனர். அதில் இருந்த பதிவு எண் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவம் நடந்துள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக சிறிய கோவில்களில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் மேலும் ஒரு கோவிலில் துணிகர கொள்ளை நடந்துள்ளது.

    அதன் விபரம் வருமாறு:-

    விருதுநகர் அருகே உள்ள வெள்ளூர்-புதுப்பட்டி ரோட்டில் மாகாளி பட்டி என்ற இடத்தில் தும்மம்மாள் அம்மன் கோவில் உள்ளது. கிராம கோவிலான இங்கு அதே பகுதியை சேர்ந்த சிவக் குமார் என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் சம்பவத் தன்று இரவு பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டி வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அலுவலக அறைக்கு சென்ற கொள் ளையர்கள் அம்மனின் தங்க தாலி, வெள்ளி நாகர் சிலை, உண்டியல் பணம் 3 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். மறு நாள் கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு தாலி, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகி சுந்தரராஜன் எம்.புதுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • மனோன்மணி வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டிற்கு சென்றார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளை போயிருந்தது.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள ரெட்டியார் மடத்தை சேர்ந்தவர் கனகராஜ்.

    இவரது மனைவி மனோன்மணி (வயது 45). பேக்கரி தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஈரோட்டுக்கு சென்றார்.

    அப்போது மனோன்மணி வீட்டில் ஓட்டை பிரிந்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 1 பவுன் தங்க நகை ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய மனோன்மணி பணம் மற்றும் நகை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    ×